உத்திராடம் தொடர்ச்சி


 
பொதுவான குணங்கள்

உத்திராடத்தின் நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் உடையவர்கள். இந்த உலகத்தில் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பேச்சில் பதிலடி தர தயங்க மாட்டார்கள். மனத்தில் பட்டதை சட்டென்று வெளிப்படுத்துவதால், சில தருணங்களில் பலருக்கும் வேண்டாதவர்கள் ஆகிவிடுவர். அறிவுப்பசி, ஆசாரம், தெய்வ பக்தி, தர்ம சிந்தனை, நேர்மை, வாய்மை மிகுந்தவர்கள்.நல்ல தோற்றம், பேச்சுத் திறமை, வெற்றியைத் தேடிச் செல்லும் முயற்சி ஆகியவை இவர்களின் பொதுவான குணங்கள்.

சமூக நலனுக்காக பாடுபடும் குணம் உடையவர்களாதலால் விழிப்பு உணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பாடுபடுவார்கள். நல்ல அறிவாளி, கோபித்தும் கொஞ்சியும் தனது காரியங்களை சாதித்து கொள்வார்கள். மன வலிமையும், வைராக்கியமும் உடையவர்கள். வீண் விவாதத்துக்கு வந்தால், கொஞ்சம் கூட சளைக்காமல் அவர்களுக்கு பதிலடி தருவர்கள். செய்த நன்றியை மறக்க மாட்டார்கள். கண்ணால் கண்ட உண்மைகளை மறக்காமல் பேசுவார்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும் என்பதற்கேற்ப நிலம், பூமிகளை வாங்கி சேர்ப்பார்கள். வயோதிக வயதிலும் இளமை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். தான தர்மங்கள் செய்து அனைவருக்கும் நல்லவராய் நடப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரை உள்ளவர்கள். அழகாக இருப்பார்கள். நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். வாழ்க்கைத் துணையிடம் அளவுக்கதிகமான பாசம் கொண்டிருப்பார்கள். அடிமட்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எப்படியாவது வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வந்து விடுவார்கள்

உற்றார் உறவினர்களால் நற்பலன் கிட்டும். அனைவருக்கும் உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவர். சகிப்பு தன்மையும் விட்டு கொடுக்கும் சுபாவமும் இளமையிலேயே இருக்கும். அகங்காரம் அதிகம் இருப்பதால் சில நேரங்களில் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். தன்னுடைய தவறுகளை சாமர்த்தியமாக மறைத்து விடுவார்கள் ஒரே நேரத்தில் பலவிதமாக யோசிப்பதால் மதில் மேல் பூனை போல மனம் அலை பாயும். குடும்பத் தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். அனைவரும் மெச்சும்படி வாழ்வார்கள்.

நண்பர்கள்

எப்பொழுதும் நண்பர்களின் கூட்டத்திற்கு நடுவில் இருப்பார்கள். நண்பர்களுடன் அடிக்கடி விவாதங்களில் ஈடுபடுவார்கள்

நட்பு நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மூலம் ஆகியவை நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

புனர்பூசம், உத்திரம், விசாகம், கார்த்திகை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் தவிர்ப்பது நல்லது.

தொழில்

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல கலைகளையும் கற்றுக் தேர்ந்திருப்பார்கள். சமூகநலப் பற்று உடையவர்கள். மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த வைத்தியம், ஹோமியோபதி, சீன வைத்தியம் போன்ற துறைகளில் சாதிப்பார்கள். பூமியை ஆதாரமாகக் கொண்ட தொழில், மந்திர தந்திரம், நாடகத்துறை, நடிப்பு, திரைப்பட தயாரிப்பு போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். நீச்சல் போட்டிகளிலும் மிளிர்வார்கள். ராணுவத்தில் படை தலைமை வகிப்பார்கள் பலருக்கும் பயிற்சி அளிப்பார்கள். நீதி மன்றங்களில் திறமையாக வாதாடும் வக்கீல் களாகவும் இருப்பார்கள். பொருளாதார ரீதியாக எப்பொழுதும் பஞ்சம் இருக்காது. நாட்டில் எங்கு தவறு நேர்ந்தாலும் அதை தயங்காமல் கேட்கும் குணம் கொண்டவர்கள்.

தசா பலன்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் தசை முதல் தசையாக வரும். சூரியன் தசை மொத்தம் 6 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சூரியன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சூரியன் தசை:


சூரியன் பலம் பெற்றிருந்தால் தந்தைக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் மேன்மை ஏற்படும். சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷம், உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் குழந்தைக்கு உண்டாகும்.


சந்திரன் தசை:

இரண்டாவதாக வரும் சந்திர தசை 10 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பலமிழந்திருந்தால் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்படும்.

செவ்வாய் தசை:


மூன்றாவதாக வரும் செவ்வாய் தசை 7 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.

 
ராகு தசை:


அடுத்து வரும் நான்காவது தசை ராகு தசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பல வகையில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.

 
குரு தசை:


ஐந்தாவதாக வரும் தசை குரு தசை. இந்த தசையில் நல்ல மேன்மைகளை ஏற்படுத்தி வாழ்க்கை வளம் பெறும்.
அடுத்து வரும் சனி தசையும் குரு தசை போல் நல்ல மேன்மைகளை ஏற்படுத்தி வாழ்க்கை வளம் பெறும்.

பொது பரிகாரம்

உத்திராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள பலாமரமாகும் இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

உத்திராட நட்சத்திரத்தில் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், குழந்தையைத் தொட்டிலிடுதல் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துதல், பெயர் சூட்டுதல் அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். புது மனை புகுதல், வீடு வாகனம் வாங்குதல், வாஸ்து படி வீடு கட்டுதல் வான், நீர், நில வழி பயணங்கள் மேற்கொள்ளுதல், வங்கி கணக்கு தொடங்குதல், வியாபாரம், புது வேலையில் சேருதல், நாட்டிய அரங்கேற்றம் பத்திர பதிவு, உயில் எழுதுதல் போன்ற நல்ல காரியங்களை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, மிருகசீரிஷம், அஸ்தம், பூராடம் ஆகியவை பொருத்தமான நட்சத்திரங்கள் ஆகும்.

பொருந்தா நட்சத்திரங்கள்:

புனர் பூசம், உத்திரம், விசாகம், கிருத்திகை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. புனர்பூசம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்