உத்திரம் தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி சூரிய பகவான் என்பதால் நல்ல மன வலிமையும், உண்மை பேசும் குணமும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், நல்ல அறிவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். திறமைசாலிகள். கல்வியறிவும், சமயோசித புத்தியும் கொண்டவர்கள். ஆசாபாசங்கள் அதிகமிருந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனை இருக்கும். கோபம் இருந்தாலும், தன்னடக்கமும் இருக்கும். ‘தான் நினைத்ததுதான் சரி’ என்ற பிடிவாத குணமும் உண்டு.

இலக்கியங்களிலும் சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்று இருப்பார்கள். அடிக்கடி சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள்.


குடும்ப வாழ்க்கை

மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கரை உடையவராக இருப்பார்கள். வாழ்க்கைத்துணையிடம் பணிந்து போவார்கள். இன்னும் சொல்லப்போனால் உத்திர நட்சத்திரக்காரர்கள் ஆண்களாக இருந்தால் மனைவி சொல்லே மந்திரம் என இருப்பார்கள். ஒரு சிலர் வீட்டோடு மாப்பிள்ளையாக கூட இருப்பார்கள். இல்லையென்றால் மாமனார் குடும்பத்தை தன்னோடு வைத்துக் கொள்வார்கள்.

உத்திர நட்சத்திரக்காரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறையும் பாசமும் கொண்டிருப்பார்கள். முன்கோபத்தால் சிறுசிறு வாக்கு வாதங்கள் எதிர்கொள்ள நேரிட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். இளமை காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், முப்பது வயதிலிருந்து செல்வம், செல்வாக்கு யாவும் சேரும். பூர்வீக சொத்துக்கள் அதிகமிருந்தாலும் தங்களுடைய சொந்த முயற்சியால் வீடு மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை சேர்ப்பார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். சிறு வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழக்க வேண்டியிருக்கும்.


நண்பர்கள்

உத்திர நட்சத்திரக்காரர்களின் வளர்ச்சி பலருக்கும் கண்ணை உறுத்தும். உறவினர்கள், நண்பர்கள் என எவரும் உங்கள் முகத்திற்கு நேராக சிரித்துப் பேசுவார்கள். முதுகுக்குப் பின்னால் புறம் பேசுவார்கள். இவர்கள் எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார்கள்


நட்பு நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் நட்பு நட்சத்திரங்கள்


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த நட்சத்திரங்களை உத்திர நட்சத்திரக்காரர்கள் தவிர்க்க வேண்டும்.


தொழில்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனோதிடமும் அறிவாற்றலும் அதிகம் இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களாகவோ அல்லது பெரிய பெரிய நிறுவனங்களை அமைத்து அதில் பல ஆட்களை வைத்து வேலை வழங்குபவராக இருப்பார்கள். தொழிலாளி முதலாளி என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துவதால் நல்ல மனம் உள்ளவர்கள் என்று பெயர் எடுப்பார்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவார்கள். வேத சாஸ்திரம் மற்றும் ஜோதிடம், கலை, இசை போன்றவற்றாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். எந்த ஒரு போட்டி பொறாமைகளையும் தவிடு பொடியாக்க கூடிய அளவிற்கு மனோதிடம் பெற்றவர்கள்.


தசா பலன்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய தசை முதல் தசையாக வரும். சூரிய தசை மொத்தம் 6 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சூரியன் தசை:
சூரிய பகவான் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், தந்தைக்கு முன்னேற்றம் கொடுக்கும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் தந்தைக்கு கெடுபலன்களும் உண்டாகும்.
சந்திரன் தசை:
இரண்டாவதாக வரும் தசை சந்திர தசை ஆகும் இந்த காலங்களில் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு மேலும் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழலை உண்டாக்கும்.
செவ்வாய் தசை:
மூன்றாவதாக வரும் செவ்வாய் தசையிலும் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படாது என்றாலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேற்றத்தை அடைந்து விட முடியும். செவ்வாய் பலம் பொருந்தி இருந்தால் முன்னேற்றம் நிச்சயம் உண்டு எனலாம்.
ராகு தசை:
அடுத்து வரும் நான்காவது தசை ராகு தசை ஆகும். இது மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். ராகு இருக்கும் வீட்டின் அதிபதி நல்ல பலம் பெற்று இருந்தால் பலவகையில் யோகத்தை தரும்.
குரு தசை:
ஐந்தாவதாக வரும் குரு தசையும் நல்ல ஏற்றத்தை தரும்.
சனி தசை:
6வதுதாக வரும் சனி தசை காலங்களில் சனி பகவான் நல்லப்படி அமைந்து இருந்தால் உயர்வான அந்தஸ்தினை அள்ளிக் கொடுக்கும்.


பொது பரிகாரம்

உத்திர நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் அலரி மரம் மற்றும் இலந்தை மரம் ஆகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

உத்திர நட்சத்திரத்தில், பூ முடித்தல், தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம், புதிய வாகனம், ஆடை அணிகலன்களை வாங்குதல், வியாதிக்கு மருந்து உட்கொள்ள மேற்கொள்ளுதல், தெய்வ பிரதிஷ்டை செய்தல், விதை விதைத்தல், வியாபாரம் தொடங்குதல், புதிய வேலையில் சேருதல் குளம் கிணறு வெட்டுதல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற நல்ல காரியங்களை செய்யலாம்


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்

பொருந்தா நட்சத்திரங்கள்:

கிருத்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரங்களை திருமணம் செய்ய கூடாது.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் மஹாதேவ்யை சவித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லஷ்மி பிரசோதயாத்