நட்சத்திரங்கள்- 27

ஜோதிடத்தில் பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன என்பது அறிந்தே. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. மேலை நாடுகளில் சூரியனை மையமாக கொண்டு ஜோதிடம் கணிக்கப்படுகிறது. நம்முடைய ஜோதிடத்தில் பராசர மகரிஷி, ஜைமினி மகரிஷி மற்றும் தாஜக் முறை மூன்று பிரிவுகளைக் கொண்டு உள்ளதாக கூறலாம். இந்த முன்று முறைகளிலும் லக்கினத்திற்கு அடுத்ததாக சந்திரன் தான் மையமாக வைத்து ஜோதிடம் சொல்லப்படுகிறது. கோள்களின்(Planets) நகர்வை வைத்துக் கொண்டு வருங்காலத்தை கணிக்க முடியும் என்பதை சொல்வது தான் ஜோதிடம். ஜோதிடம் என்பது கடல். நம்மால் சில முத்துக்களை தான் எடுக்க முடிகிறது.

“ஜோதிடர்கள் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு அவர்களால் இயன்ற முன்கூட்டி அறிவிக்கிறார்கள். ஆயினும் நம்மை படைத்த பிரம்மனை தவிர வேறு யாராலும் திட்டவட்டமாக ‘இது தான் நடக்கும்’ என்று கூற முடியாது “

என்று சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர் காளிதாசன் அவர்கள் தனது வாக்கில் கூறியுள்ளார் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.
எல்லா ரிஷி, சித்தர்களின் பாதங்களை வணங்கி பராசரமகரிஷி முறைப்படி நட்சத்திரத்தின் பலன்கள் விவரங்களை இந்த நூலில் தந்து உள்ளேன்.

வாருங்கள்!!...ஜோதிட முத்துக்களில் 27 நட்சத்திரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்

                        நட்சத்திரங்கள்

விண்மீன் அல்லது நட்சத்திரம் என்பது விண்வெளியில் காணப்படும் ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இந்து ஜோதிடத்தில் குறிப்பிட்ட விண்மீன் கூட்டம் அல்லது நட்சத்திரம் என்பது ராசிச் சக்கரத்தை (கட்டத்தை) 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு ராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஓர் நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இந்த பெயர் குறிக்கிறது.

(எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் ராசி சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.)

சூரியனை மையமாக வைத்து நீள வட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீள வட்டமான பாதை தான் ராசி மண்டலம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்களாகப் பிரித்து அதற்கு பெயர் இட்டனர். அந்தப் பெயரால் தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றன .