அஸ்வனி


அஸ்வினி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) இருக்கும் 27 நட்சத்திரங்களில் முதலாவது நட்சத்திரம் ஆகும். இது மேஷ ராசியில் (Aries) உள்ள மிகப் பிரகாசமான நட்சத்திரம். இதனுடைய அறிவியல் பெயர் - Arietis ஆகும். மேற்கத்திய நாடுகளில் இதை "ஹாமல்" (Hamal) என்பர்.

பிரசவம் என்பது மருத்துவர் (பழைய காலத்தில் மருத்துவச்சி) உதவியுடன் தாய் மற்றும் குழந்தை என்னும் இரட்டை உயிர்களை பிரித்தெடுப்பது தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த இரட்டை உயிர் அம்சம்தான் அஸ்வினி குமாரர்கள். இவர்களின் பெயர் நாசத்யா மற்றும் தஸ்ரா ஆகும். இரட்டையர்களாக அழைக்கும் போது தான் அஸ்வினி குமாரர்கள் என்று அழைப்பார்கள். பாண்டவர்களில் நகுலனும் சகாதேவனும் இந்த அஸ்வினி குமாரர்களுக்குப் பிறந்தவர்கள் என்று மகாபாரதத்தில் சொல்லப்படுகிறது. நகுலன் குதிரை பற்றிய அனைத்து விவரங்களை அறிந்தவர் என்றும் சகாதேவன் ஜோதிடம் மற்றும் மருத்துவம் அறிந்தவர் என்றும் கூறும் போதே அஸ்வினி நட்சத்திரத்திற்கும் அஸ்வினி தேவர்களுக்குமான தொடர்பு நமக்கு புரியும்.

இது சூரியனின் குறுக்களவு விட 18 பங்கு பெரியது. சூரியனைப்போல் 4.5 பங்கு கனமுள்ளது. 55 பங்கு ஒளியுடையது. பூமியிலிருந்து 65.9 ஒளி ஆண்டுகள் தூரத்தில் தான் இருப்பதால் இதன் தோற்ற ஒளிப்பொலிவு (apparent magnitude) 2.01 ஆகும்.

இரவில் நட்சத்திரங்களை கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் அஸ்வினி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

அச்சுவனி அறுமீன் குதிரைத் தலைபோல்
மெச்சிடு கடகத்திரு கடிகையதாம்

பொருள்: அஸ்வினி(அச்சுவனி) ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட. அவைகள் சேர்ந்த உருவம் குதிரைத் தலை போல் இருக்கும். அச்சுவனி உச்சத்தில் வரும்போது கீழ்வானில் கடக ராசி உதித்து இரண்டு நாழிகை இருக்கும்.


நட்சத்திர காரத்துவம்:

அஸ்வனி நட்சத்திரத்தைப் பற்றியும் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை பற்றியும் பார்ப்போம் (இது பொது பலன்களே, ஜாதகத்தை வைத்துதான் சரியான பலன்களை சொல்ல முடியும் என்பதை தயவு செய்து நினைவில் வைத்துக் கொள்ளவும்)


  1. ஆளும் உறுப்புகள்: தலை பாகம், மூளை.

  2. பார்வை: சமநோக்கு.

  3. பாகை 0.00 - 13.20.

  4. தமிழ் மாதம்: சித்திரை.

  5. நிறம்: மஞ்சள்.

  6. இருப்பிடம்: நகரம்.

  7. கணம்: தேவ கணம்.

  8. குணம்: எளிமை, தாமசம்.

  9. மிருகம்: ஆண் குதிரை.

  10. பறவை: ராஜாளி.

  11. மரம்: பாலில்லாத எட்டி மரம் (விஷமூட்டி மரம்).

  12. மலர்: நீலோத்பலம்.

  13. தமிழ் அர்த்தம்: குதிரைத்தலை.

  14. தமிழ் பெயர்: புரவி.

  15. சராதி நட்சத்திரப்பிரிவுகள்: சரம்.

  16. நாடி: தட்சிண பார்சுவ நாடி, வாத நாடி.

  17. ஆகுதி: அரசு, ஆல்..

  18. பஞ்சபூதம்: நிலம்.

  19. நைவேத்யம்: பாலேடு.

  20. தேவதை : இரண்டு முகங்களும் நான்கு கரங்களும், சிவந்த நிறமும் வாய்த்த அக்னி பகவான்.

  21. அதி தேவதை: எமன், முருகப்பெருமான், விநாயகர், மகாவிஷ்ணு.

  22. அதிபதி : கேது.

  23. நட்சத்திரம் தன்மைகள் : ஆண் நட்சத்திரம், இரட்டையர்கள் (இரட்டை நட்சத்திரம்), சவ்விய நட்சத்திரம் (சவ்வியம் என்றால் வலதுபாகமாக சஞ்சரிப்பது)

  24. உருவம்: குதிரை முகம்.

  25. மற்ற வடிவங்கள் :
    பல உரு பொருட்கள் அஸ்வினி வடிவத்திற்கு உள்ளன. அதில் முதன்மையானது, இரண்டாக வெட்டி பிரிக்கும் கத்தரிக்கோல் முதன்மையானது. தாய் சேய் என்னும் ஒரே உயிராக இருந்ததை இரண்டாகப் பிரிக்கும் தொப்புள் கொடியை வெட்டி விடுவது இந்த கத்திரிக்கோல் தான். எனவே முதல் அடையாளம் இந்த கத்தரிக்கோல்.

  26. மற்ற பெயர்கள்:.
    ஈரலை, பரி, கிள்ளை, வாசி, கொக்கு, மா, காச்சி, பரதேசி, கோடகம், சென்னி குதிரை, ஐப்பசி.

  27. வழிபடவேண்டிய தலம்: வைத்தீஸ்வரன் கோயில், ஸ்ரீரங்கம், கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோயில், கூத்தனூர் சரஸ்வதி கோயில்.

  28. அதிஷ்ட எண்கள்: 1, 3, 9.

  29. வணங்க வேண்டிய சித்தர்: காத்யாயனா.

  30. பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்: கு,சே, சோ, ல.

  31. அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பழுப்பு..

  32. அதிஷ்ட திசை: வடகிழக்கு..

  33. அதிஷ்ட கிழமைகள்: வடகிழக்கு..

  34. அணியவேண்டிய நவரத்தினம்: பவளம்.

  35. அதிஷ்ட உலோகம்: தாமிரம், பஞ்சலோகம்..

  36. வெற்றி தரும் நட்சத்திரங்கள்: ரோகிணி,அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், உத்திரட்டாதி, ரேவதி..

  37. நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்: அஸ்வத்தாமன்.

  38. குலம்: வைசியகுலம்.

  39. புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்: தர்மம்


பொதுவான குணங்கள்:

அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி ஞானகாரகன் கேது என்பதால் ஒருவரை பார்த்தவுடன் அவரை எடை போடும் ஆற்றல் இருக்கும். எடுக்கும் காரியங்களை விதி முறைக்குட்பட்டே செய்து முடிக்கும் மனசாட்சி உள்ளவர். சிறந்த சிந்தனையாளர் அதிகாரத்திற்கு பெயர் போன செவ்வாயின் ராசியான மேஷத்தில் இருப்பதால் தன்மானமும் சுய கௌரவமும் அதிகமிருக்கும். எதையும் சுயமாக சிந்தித்தே செயல்படுத்துவார்கள். பிடிவாத குணம் இருக்கும் அடுத்தவர் சொல்லுக்கு கட்டுப்படாதவர்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் சொத்தாக கொண்டவர்கள். வம்பு சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விட மாட்டார்கள். இவர்களிடம் வாதிட்டு வெற்றி பெறுவது என்பது அரிது. மேடை பேச்சுகளில் பாராட்டுதலையும் கைதட்டுதல்களையும் பெறாமல் இறங்க மாட்டார்கள்.

“வெட்டு ஒன்று துண்டு ரெண்டு” எனப் பேசுவது, அந்த நொடியிலேயே முடிவெடுப்பது, குதிரையின் வேகம் அதாவது பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாத செயல்களில் அவசரம், முடிவெடுத்துவிட்டால் பின்வாங்காத குணம், அச்சம் என்பது துளிகூட இல்லாமல் இருப்பது, தோல்வி ஏற்பட்டால் கூட குதிரையின் வேகத்தில் சட்டென்று சுதாரித்து மீண்டும் எழுந்து ஓடும் திறமை முயற்சிகளில் அதிதீவிரம், எளிதில் கை நீட்டி தாக்கும் குணம், அடுத்தவரை அலட்சியமாக பேசி காயப்படுத்துதல், தாய் மீது அளவு கடந்த பாசம், வாழ்க்கைத் துணை மீது அதிகாரம் செலுத்துதல் ஆகியவை இந்த நட்சத்திரத்தின் குணம் ஆகும்.

சகோதர ஒற்றுமை குறைவாக இருக்கும். சில அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு தங்கள் சகோதர் உடன் சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும். இளைய சகோதரர் இவரை விட அதிகம் படித்தவராக இருப்பார். அதேசமயம் சகோதரியாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் அதிக காரமான உணவுகளை மற்றும் சூடான உணவை விரும்புவார்கள். பொதுவாக இவர்கள் உணவு பிரியர்கள் எனலாம். புதிய வகை உணவுகளை அதிகம் விரும்புவார்கள்.

உடையில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். அதாவது உடைகளை சரியாக தேர்ந்து எடுக்க முடியாதவராகவும் இருக்கலாம்.

அஸ்வனி நட்சத்திரத்தின் மரம் எட்டி ஆகும். எட்டியின் கசப்பு அனைவரும் அறிந்ததே. இவர்கள் ஏதோரு சூழ்நிலை அல்லது ஒரு கட்டத்தில் மற்றவர்களால் ஒதுக்கப்படுவார்கள்


குடும்ப வாழ்க்கை:

வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிட்டாலும் அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறையும் இருக்காது. பூர்வீகச் சொத்தில் சிறிதேனும் அனுபவிப்பார்கள்.

காதலிக்கும் யோகம் இருந்தாலும் சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே காதல் திருமணம் அமையும். இல்லையென்றால் பெற்றவர்கள் பார்த்து செய்யும் வாழ்க்கை துணையையே பெற முடியும். வாழ்க்கைத் துணையாக வருபவர் நச்சரிப்பு செய்பவராக இருப்பார். ஆனால் அதிக பாசம் பற்று உடையவராக இருப்பார். சிற்றின்ப ஆர்வம் சற்று அதிகமாக இருக்கும். வாழ்க்கை துணை பிள்ளைகளின் மீது அதிக அக்கறையும் பிரியமும் இருக்கும். அவர்களையும் தன்னை போலவே நீதி, நேர்மை தவறாமல் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள்.

வேதை என்னும் எதிர்மறையான செய்கை தரும் நட்சத்திரம். அஸ்வினிக்கு கேட்டை தான் வேதை ஆகும். இந்த கேட்டை நட்சத்திரக்காரர்களிடம் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். திருமணத்தில் வாழ்க்கை துணையாக இந்த கேட்டை நட்சத்திர காரர்களை அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தவிர்க்க வேண்டும். ஆலோசனை, மறுபரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ளக் கூடாது.
(திருமண பொருத்தத்தில் வேதை மட்டும் மிக முக்கியம்.)

பொதுவாக இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிகம் இருப்பர்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எதிலும் முதலிடத்தில் இருக்கவே விரும்புவார்கள்

நண்பர்கள்>

கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை சுற்றி எப்பொழுதும் நண்பர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருந்தாலும் நல்லவர்களாக தேர்ந்தெடுத்தே பழகுவார்கள். மேலும் நண்பர்களுக்கு அவர்கள் அளவாக தான் உதவி செய்வார்கள்.

நட்பு நட்சத்திரங்கள்:

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும் நட்சத்திரகாரர்கள் பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆவார். இந்த நட்சத்திரங்களில் இல்லாதவர்கள் அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் நண்பர்களாக இருந்தால் அந்த நட்பு நீடிக்காது அல்லது கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

மேற்கூரிய நட்சத்திர நண்பர்களையே கூட்டு தொழிலுக்கும் சேர்த்துக்கொள்ளலாம்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்>

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் முதலான நட்சத்திரக்காரர்கள் என்று சொல்லப்படுகிறது

அஸ்வினி நட்சத்திரக்காரர்களை வீண் பிரச்சினைகளில் சிக்க வைக்கும் நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் ஆகும். எனவே இவர்களிடம் அளவோடு, ஒரு எல்லைக் கோடு போட்டு பழக வேண்டும்.

மிருகசீரிடம், சித்திரை அவிட்டம் நட்சத்திரக்காரர்களிடம் பெரிய பிரச்சினைகள் இருக்காது ஆனால் நச்சரிப்பு இருக்கும். அதாவது அடிக்கடி உதவி கேட்கலாம்.

தொழில்>

பணியிடத்தில் அதிகாரம் செய்வது, அதிகபட்சம் அதிகாரப் பதவிகளில் இருப்பது போன்ற நிலை இருக்கும்.

சொந்தத் தொழில் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். கூட்டுத்தொழில் செய்வதில் ஈடுபடுவார்கள். சிறிய அளவிலாவது வட்டி தொழில் செய்வார்கள்.

கட்டிடத்தொழில், கட்டுமான பொருட்கள் விற்பனை, உணவகம் தொடர்பான தொழில் செய்வார்கள். மருத்துவத்தில் உயர்நிலை பணியில் இருப்பார்கள். மருந்துக்கடை, இறைச்சி வியாபாரம். ஆடு, மாடு, கோழி பண்ணை என ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

பூமி தொடர்பான இயந்திரத் தொழில் (ஜேசிபி, பொக்லைன்) அகழ்வாராய்ச்சி. தூதரக பணி. அரசு பணி, அரசியல் ஆர்வம் கொண்டிருப்பார்கள்

தசா பலன்கள் >

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை முதல் திசையாக வரும். கேது தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கேது தசை:
கேது தசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கல்வியில் மந்த நிலையை கொடுக்கும். தாயின் உடல் நிலையும் பாதிப்படையும் சோம்பல் தனம், பிடிவாத குணம் இருக்கும்.

சுக்கிர தசை:
அடுத்தாக வரும் தசை சுக்கிர தசை 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரன் கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் அமைந்து இருந்தால் மட்டுமே இந்த தச காலங்கள் மேன்மையான நற்பலன்களையும், சுகவாழ்வு சொகுசு வாழ்வையும் பெற முடியும். வாழ்க்கை தரமும் உயர்வடையும்.

சூரிய தசை:
மூன்றாவது வருவது சூரிய தசை ஆகும். பொதுவாகவே மூன்றாவது தசை முன்னேற்றத்தை நல்லபடியாக தரும் என்று சொல்ல முடியாது சுமாராகத் தான் இருக்கும் என்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டுத்தான் முன்னேற வேண்டி இருக்கும். தந்தையிடம் மன சஞ்சலங்களையும் பிரச்சனைகளையும் கொடுக்கும், உஷ்ண சம்பந்தபட்ட ஆரோக்கிய பாதிப்பும் ஏற்படும்.

சந்திர தசை:
சந்திர தசை நான்காவது தசையாக வருகிறது சந்திரன் கேதுவின் நட்சத்திரத்தில் அமைந்து, தசை நடைபெறும் இந்த இக்காலங்களில் மனக்குழப்பங்கள், தாயிடம் கருத்து வேறுபாடு மனம் அலை பாய கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் வாழ்வில் நல்ல பல முன்னேற்றத்தையும் செல்வ செழிப்பையும் அடைய முடியும்.

செவ்வாய் தசை:
7 வருடங்கள் செவ்வாய் தசை ஐந்தாவதாக வரும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாவது தசையாக வரும் செவ்வாய் தசை மாரக தசை என்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் செவ்வாய் பலமாக அமைந்து சுபர் பார்வையுடன் இருந்தால் பொருளாதார மேன்மையையும், பூமி மனை வாங்க கூடிய யோகத்தையும், சுகவாழ்வையும் உண்டாக்கும்.

ராகு தசை:
ராகு தசை 6வது தசையாக 18 வருடங்கள் நடைபெறும் ராகு தசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், செல்வம் செல்வாக்கும் வசதி வாய்ப்புகளையும் பெற முடியும்.

மேற்கூறிய தசை காலங்களின் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ் நாளில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

பொது பரிகாரம்>

அஸ்வினி நட்சத்திர காரர்களுக்கு எட்டி மரம் பரிகார விருட்சமாகும். இந்த மரத்தை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்>

அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் அதாவது அஸ்வனி நட்சத்திரத்தில் மனை முகூர்த்தம் செய்தல், புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குதல், சாஸ்திர பயிற்சி தொடங்குதல், விதை விதைத்தல், மரக்கன்றுகள் நடுதல், கடல் வழி பயணங்கள் மேற்கொள்ளுதல், தானியங்கள் வாங்குதல், பசு தொழுவம் அமைத்தல், திருமணம், பூ முடிப்பது,குழந்தைக்கு பெயர் வைப்பது, மொட்டை அடித்து காது குத்துவது போன்றவற்றை செய்வது நல்லதுஅஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் அதாவது அஸ்வனி நட்சத்திரத்தில் மனை முகூர்த்தம் செய்தல், புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குதல், சாஸ்திர பயிற்சி தொடங்குதல், விதை விதைத்தல், மரக்கன்றுகள் நடுதல், கடல் வழி பயணங்கள் மேற்கொள்ளுதல், தானியங்கள் வாங்குதல், பசு தொழுவம் அமைத்தல், திருமணம், பூ முடிப்பது,குழந்தைக்கு பெயர் வைப்பது, மொட்டை அடித்து காது குத்துவது போன்றவற்றை செய்வது நல்லது

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:>

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது அஸ்வனி நட்சத்திரத்திற்கு

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. கேட்டை வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்>

                                  சரஸ்வதி தேவியின் காயத்ரி மந்திரம்

ஓம் வாக் தேவியை ச வித்மஹே
விரிஞ்சி பந்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்!


4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

அஸ்வினி 1ம் பாதம்:

நட்சத்திர அதிபதி கேது
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி செவ்வாய்


அஸ்வினி 1ம் பாதத்தின் தன்மையை ஆராயும் போது அது நவாம்சத்தில் எங்கு வருகிறது என்று பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது அஸ்வனி 1 ம் பாதம் எனில் நவாம்சத்தில் சந்திரன் மேஷத்திலே இருப்பார். எனவே நவாம்ச அதிபதி செவ்வாய் ஆகும். இவர்களின் குணத்தை ஆராயும் போது

“செவ்வாய் (ராசி அதிபதி) + கேது (நட்சத்திர அதிபதி) + செவ்வாய் (நவாம்ச அதிபதி) “

என்று வைத்து ஆராய வேண்டும்.

இவர்கள் மன சஞ்சலம் உடையவர்களாக இருப்பார்கள். அழகாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். எல்லோரிடமும் அன்பாக இருப்பார்கள். புத்தியால் புகழையும் செல்வத்தையும் பெறுவார்கள். ஆனால் அற்பமான எண்ணங்களும், புறம் பேசும் குணமும் இருக்கும். சிறு வயதில் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கும். சகோதரர்களால் பிரச்னைகளைச் சந்திப்பீர்கள். ஆண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிட்டாலும் அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறையும் இருக்காது. நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள்.

அஸ்வினி 2ம் பாதம்>
நட்சத்திர அதிபதி கேது
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சுக்கிரன்

பிறரை எடை போடுவதில் வல்லவர்கள். மற்றவர்களை புரிந்து கொண்டு அன்புடன் பழகுவார்கள். விவாதத்திலும், ஆடம்பரத்திலும் பிரியர்கள். மற்றவர்களை கவரும் படியான தோற்றத்துடன் காணப்படுவார்கள். தாயிடம் பாசம் வைத்து இருப்பார்கள். உயர்கல்வி யோகம், காதல் திருமண யோகம் உண்டு

அஸ்வினி 3ம் பாதம்>

நட்சத்திர அதிபதி கேது
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி புதன்

இவர்கள் கணிதத்தில் அதிக ஆர்வமுடையவராக இருப்பார்கள். நல்ல கூரிய அறிவு உடையவர்களாக இருப்பார்கள். ஆசிரியர்கள் போல் நல்லவற்றை பிறருக்கு போதிப்பார்கள். உஷ்ண உடலும், மூல வியாதியும் பெற்று இருப்பார்கள். வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பால் சிலருக்கு திருமணம் தாமதப்படும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் எளிமையாக இருக்க விரும்புவார்கள்.

அஸ்வினி 4ம் பாதம்:

நட்சத்திர அதிபதி கேது
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சந்திரன்

திறமையும் நல்ல புத்தி கூர்மையும், தெய்வீக வழிபாட்டில் நம்பிக்கையும் பெற்றவர்கள். மிகுந்த அறிவாளிகளாகவும் சகல கலைகளையும் அறிந்தவர் களாகவும் இருப்பார்கள். காம உணர்ச்சி அதிகம் இருக்கும். எதற்கும் அஞ்சாதவர்கள். அழகிய தேக அமைப்பு பெற்றிருப்பதுடன் சிலருக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும். தாயிடம் அதிக பாசம் உண்டு எப்போதும் பரபரப்பாகவே காணப்படுவார்கள்.

குறிப்பு: அஸ்வினி 1ம் பாதம் நவாம்சத்தில் மேஷத்திலும், 2ம் பாதம் ரிஷபத்திலும், 3ம் பாதம் மிதுனத்திலும், 4ம் பாதம் கடகத்திலும் இருக்கும். இந்த வகையில் தான் எல்லா கிரகங்களின் நட்சத்திரம் நவாம்சத்தில் குறிக்கப்படும்

நட்சத்திரங்கள்- 27

ஜோதிடத்தில் பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன என்பது அறிந்தே. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. மேலை நாடுகளில் சூரியனை மையமாக கொண்டு ஜோதிடம் கணிக்கப்படுகிறது. நம்முடைய ஜோதிடத்தில் பராசர மகரிஷி, ஜைமினி மகரிஷி மற்றும் தாஜக் முறை மூன்று பிரிவுகளைக் கொண்டு உள்ளதாக கூறலாம். இந்த முன்று முறைகளிலும் லக்கினத்திற்கு அடுத்ததாக சந்திரன் தான் மையமாக வைத்து ஜோதிடம் சொல்லப்படுகிறது. கோள்களின்(Planets) நகர்வை வைத்துக் கொண்டு வருங்காலத்தை கணிக்க முடியும் என்பதை சொல்வது தான் ஜோதிடம். ஜோதிடம் என்பது கடல். நம்மால் சில முத்துக்களை தான் எடுக்க முடிகிறது.

“ஜோதிடர்கள் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு அவர்களால் இயன்ற முன்கூட்டி அறிவிக்கிறார்கள். ஆயினும் நம்மை படைத்த பிரம்மனை தவிர வேறு யாராலும் திட்டவட்டமாக ‘இது தான் நடக்கும்’ என்று கூற முடியாது “

என்று சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர் காளிதாசன் அவர்கள் தனது வாக்கில் கூறியுள்ளார் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.
எல்லா ரிஷி, சித்தர்களின் பாதங்களை வணங்கி பராசரமகரிஷி முறைப்படி நட்சத்திரத்தின் பலன்கள் விவரங்களை இந்த நூலில் தந்து உள்ளேன்.

வாருங்கள்!!...ஜோதிட முத்துக்களில் 27 நட்சத்திரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்

                        நட்சத்திரங்கள்

விண்மீன் அல்லது நட்சத்திரம் என்பது விண்வெளியில் காணப்படும் ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இந்து ஜோதிடத்தில் குறிப்பிட்ட விண்மீன் கூட்டம் அல்லது நட்சத்திரம் என்பது ராசிச் சக்கரத்தை (கட்டத்தை) 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு ராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஓர் நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இந்த பெயர் குறிக்கிறது.

(எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் ராசி சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.)

சூரியனை மையமாக வைத்து நீள வட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீள வட்டமான பாதை தான் ராசி மண்டலம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்களாகப் பிரித்து அதற்கு பெயர் இட்டனர். அந்தப் பெயரால் தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றன .